Friday, February 19, 2010

இமை மூடி வைத்தேன்


வரிகள் : புகழேந்தி
...............................
இமை மூடி வைத்தேன்..கண்ணில்
இருக்கும் நீ எங்கு போவாய்..
சுமை எனக்கில்லை சுவை அதில் உண்டு
சுந்தர நாமா ஸ்ரீ ராமா (இமை மூடி)

மனம் மனம் எனும் மாளிகையில் நீ
மன்னவனாக கொலுவிருப்பாய்
வனம் வனம் என அழைந்தது போதும்
வைதேகியுடன் வாழ்ந்திருப்பாய்
அங்கு இங்கு போவதென்றால் (2)
என் அனுமதி பெறவேண்டுமே..ராமா ராமா((இமை மூடி)

கடல் கடல் அது உன் உடல் நீலம்
கண்ணில் அதனை தேக்கி வைத்தேன்
உடல் உடல் எனும் உருவுக்குள்ளே
உனை உயிராய் உணர்வாய் ஆக்கிவைத்தேன்
என் செயலைக் கண்டு சிரிப்பாயோ (2)
நீ சிறைக் கைதி அல்லவோ..ராமா ராமா((இமை மூடி)

Thursday, February 18, 2010

புண்ணியம் செய்தவர்கள்...


வரிகள் : புகழேந்தி
...............................
புண்ணியம் செய்தவர்கள் நாங்களா இல்லை
பூமியை ஆளுகின்ற நீங்களா - என
புதிர் போட்டு கேட்கும் கேள்வி ஒன்று .. அதை
புரிந்து கொண்டால் அர்த்தம் பல உண்டு ( )

மூங்கில் சொன்னது ராம மூர்த்தியின் கை
வில்லாக வளைந்தேனென்று
பாறை சொன்னது அவன் பாதம்பட்டு
பாவையாக தெளிந்தேனென்று (2)
மண் சொன்னது திருமகளைத் தந்து
மருமகனாய் அடைந்தேனென்று (2)

இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )

படகு சொன்னது அந்த பகவானை
கரை சேர்த்தது தாம் என்று
பாதுகை சொன்னது பதினான்காண்டு
அயோத்தியை ஆண்டோமென்று(2)
பறவை சொன்னது தர்ம பத்தினியை
சிறையெடுத்தது யாரென்று (2)

இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )

பழங்கள் சொன்னது ராமன் பசியை ஆற்றி
பிறந்த பயனை அடைந்தோமென்று
குரங்கினங்கள் சொன்னது அசுர கோட்டையை
தூள்தூளாய் உடைத்தோமென்று (2)
அணில்கள் சொன்னது கடலில் அணையை கட்ட
மணலெடுத்து கொடுத்தோமென்று (2)

இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )

Wednesday, February 17, 2010

என் பாடல் இதுவைய்ய ராமா..


வரிகள் : புகழேந்தி
...............................
என் பாடல் இதுவைய்ய ராமா - இதில்
எதுகையும் மோனையும் எதிர்பார்க்கலாமா
இதய தளத்திலே எழுந்த ஆசையில் (2)
இசைப்பதெல்லாம் சங்கீதமாகுமா (என் பாடல்)

கம்பன் எழுதிய கவிதை இதல்ல
ஸ்ரீ தியாகராயரின் கீர்த்தனை அல்ல
இயற்கை யாவும் என்னுள் இயங்கி
உயிராய் பிறந்து உருவாய் வளர்ந்த (என் பாடல்)

காரண காரியம் தெரியாதையா - புது
கவிதைகள் பண்புகள் புரியாதையா
சுருதிலய மேளங்கள் அறியேனைய்யா - உன்
சுந்தர நாமத்தின் நாதத்தில் தோன்றும் (என் பாடல்)

விழிகள் மூடி காணும் காட்சிகள்
மொழியில்லாமல் மொழியும் ஒசைகள்
தவழும் மழலை குழந்தையை போல
தாய் உன் மடியில் தளிராய் கிடக்கும் (என் பாடல்)

மானிலம் போற்றிடும் உன் சரிதை


வரிகள் : புகழேந்தி
...............................
மானிலம் போற்றிடும் உன் சரிதை - என்
மனதை விட்டகலாத புண்யகதை
மழையென பொழியுது தேனமுதை - உன்
மகிமையை பாடிடும் பூங்கவிதை
ராமா ராமா ( )

வித்தைகள் பயில்கின்ற வேளையில் மாமுனியின்
வேள்வியை காக்கவென விரைந்தாய் ராமா (2)
தாடகை வதம் செய்து அகலிகைக்கருள் புரிந்து
சிவனார் வில்லொடித்து சீதையின் சுயம்வரம்
புரிந்தவனே ராமா ராமா ( )

மணிமுடி சூட்டிட பெற்றவர் நினைத்தால்
மரவுரி தரித்திட சிற்றன்னை பணித்தார் (2)
மாதவம் உரிதென்று நீ வரித்தாய்.
பரதனை குறைகேட்டு பாதுகை அளித்து
பாரினை காத்தாய் ராமா ராமா ( )

மானாய் உருக்கொண்ட மாரீசனை கொன்று
வானர வீரர் தம்மை சோதரர் எனக்கொண்டு (2)
சேனையின் அணை கண்டு சீதையின் நிலைகண்டு
ராவணன் உயிர் கொண்ட ரவிகுலசோம அயோத்தியை
ஆண்ட ஸ்ரீ ராமா ராமா ( )